19/09/2026
காட்டு மைனா (Acridotheres fuscus ) என்பது ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனா ஆகும். இது இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பரவலாக காணப்படுகிறது. என்றாலும் இது இந்தியாவின் வறண்ட பகுதிகளில் இல்லை. இதன் நெற்றியின் முன் செங்குத்தாக உள்ள கறுப்புத் சிறகுகளால் இதை எளிதில் அடையாளம் காண இயலும். இதன் துணையினங்களைப் பொறுத்து இதன் விழிப்படலம் வெண்மை, மஞ்சள், நீல நிறங்களில் காணப்படும். ஆரஞ்சு-மஞ்சள் அலகின் அடிப்பகுதி கருமையாக இருக்கும்.
காட்டு மைனா சுமார் 23-சென்டிமீட்டர் (9.1 அங்) நீளம் கொண்டது. இதன் இறகுகள் சாம்பல் நிறத்திலும், தலையும், இறக்கைகளில் கருமையாக இருக்கும். இறகுகளைக் கொண்டு பாலினங்களிடையே வேறுபாடு அறியமுடியாது. இறக்கைளின் அடிப்பகுதியில் பெரிய வெள்ளைத் திட்டு காணப்படும். அந்த திட்டானது இப்பறவை பறக்கும்போது தெளிவாகத் தெரியும், மேலும் வால் இறகுகளின் முனைகள் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளன.
மேலும் சாதாரண மைனா மற்றும் பேங்க் மைனாவைப் போல கண்ணைச் சுற்றித் தூவியற்ற மஞ்சள் பகுதி இல்லை. தென்னிந்தியாவில் காணப்படும் துணையினத்தின் விழிப்படலம் நீலங் கலந்த வெண்மையாக இருக்கும். வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் துணையினத்தின் வாலடியும், வயிறும் புகைக் கருமையாக இருக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளின் தொண்டை வெளிரியதாகவும், அடிப்பகுதியின் நடுப்பகுதியானது பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
காட்டு மைனாக்கள் முக்கியமாக பூச்சிகள், பழங்கள், விதைகளை உண்பவையாகும். இதற்காக இவை முக்கியமாக மற்ற மைனா இனங்களுடன் சேர்ந்து நிலத்தில் உணவு தேடுகின்றன. இவை உண்ணிச்செடி போன்ற உயரம் குறைந்த புதர்களின் பழங்களை உணவாகக் கொள்கின்றன.
இவை பெரிய மேய்ச்சல் பாலூட்டிகளின் மீது அமர்ந்து, அவற்றின் உடலில் உள்ள புற ஒட்டுண்ணிகளை எடுக்கின்றன,மேலும் மேய்ச்சல் விலங்கு நடக்கும்போது தாவரங்களில் இருந்து பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கின்றன. வயல்களில் உழவில் ஈடுபடும் விவசாயியை இப்பறவைகள் பின்தொடரும். நகர்ப்புறங்களில் உள்ள சமையலறைக் கழிவுகளையும் இவை உணவாகத் தேடி வருகின்றன.இவை தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்க சிறிய எலிகள் உட்பட பெரிய இரையைதேடும்.
தென்னிந்தியாவில் (தெற்கத்தியக் காட்டு மைனா) பிப்ரவரி முதல் மே வரையிலும், வட இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூலை லை வரையிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. மரங்களில் உள்ள பழைய பொந்துகளிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்களில், தரையில் இருந்து 2 முதல் 6 மீட்டர் உயரத்தில் உள்ள துளைகளையும் கூடாக பயன்படுத்துகின்றன. மரங்களில் உள்ள பழை பொந்துகளுக்காக, இவை மற்ற பறவைகளுடன் போட்டியிடுகின்றன.