18/08/2026
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கான முதலாமாண்டு தொடக்க விழா!
சேலம், ஆக.17
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கான முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பி.மகேந்திரன் I.P.S கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் த.சரவணன் தனது தலைமையுரையில் மாணவர்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல வழக்கறிஞராக திகழ புத்தக அறிவு மட்டும் போதாது,அதனையும் தாண்டி நிறைய நூல்களையும் செய்தித்தாள்களையும் தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும், அதனால் மொழிபுலமையும் வளர்வதால் அதனை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் அறிவும் வளரும் என்றும்,சமூகத்தில் பல தவறான போதை பழக்கங்கள் பெருகி வரும் சூழலில் அதில் கவனம் செலுத்தாமல் நல்ல வழியில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,தங்களை மேம்படுத்தி கொள்ள மாதிரி நீதிமன்றங்கள்,பயிற்சி பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் பி.மகேந்திரன் I.P.S தனது சிறப்புரையில் சட்டம் எப்படி தோன்றியது என்பதை வரலாற்றின் மூலம் எடுத்துகூறி அதனால் தற்போது ஏற்படும் தனி நபர், குழு பிரச்சினைகளை எப்படி களைய வேண்டும் என்பதையும் சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் போன்ற நூல்களை மேற்கோள் காட்டி நீதிபரிபாலனைகள் முற்காலத்தில் எப்படி இருந்தது என மாணவர்களுக்கு விளக்கமாக கூறினார்.
இவ்விழாவில் வரவேற்புரையை கல்லூரியின் பேராசிரியர் கே.கர்ணன் அவர்களும், பேராசிரியர் எம்.பாஸ்கரன் அவர்கள் நன்றியுரையும் கூறினார்கள்.இவ்விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி எ.மாணிக்கம்,முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட நீதித்துறை சார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.