15/07/2026
போலீசில் புகார் கொடுத்தும் ஆக்ஷன் எடுக்கல: தவெக பெண்ணின் கண்ணீர் வீடியோவை ஷேர் செய்த விஜய் ஆண்டனி!
முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் தீவிர உறுப்பினராக இருக்கும் பெண் ஒருவர் கண்ணீருடன் வெளியிட்ட உருக்கமான வீடியோவை, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் ஷேர் செய்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் இந்த வீடியோவை நடுச்சாமத்தில் ஷேர் செய்திருப்பதாலேயே, சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று தற்பொழுது தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அந்தக் கண்ணீர் வீடியோவில் தவெக பெண் சசி பேசியிருப்பதாவது, "நான் இது போன்று பொதுவாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடும் ஆள் இல்லை. முதல் முறையாக வேறு வழி இல்லாமல் வெளியிடுகிறேன். நான் மன ரீதியாக ரொம்ப நொந்து போயிருக்கிறேன். நான் தான் டிவிகே சசி அக்கா பேசுகிறேன். கணவரிடம் திட்டு வாங்கலாம், உடன் பிறப்புகளிடம் திட்டு வாங்கலாம், ஆனால் சொந்த மகளின் கணவனான ஒரு மருமகன், மாமியாரிடம் அசிங்கமாகக் கேள்வி கேட்டு யாராவது திட்டு வாங்குவார்களா? அவன் எங்களை ரொம்ப நொடிக்கிறான், மிகத் தரக்குறைவாகப் பேசுகிறான்.
நான் சேலம் மாவட்டத்தில் இருக்கும் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர். என் மருமகன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து இப்படி அசிங்கமாகப் பேசுகிறான், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறான்.
வாழப்பாடி போலீஸ் அஜாக்கிரதை?
அவன் மீது உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக-வின் சிங்கப்பெண் படைக்கு போன் செய்து புகார் தெரிவித்தேன். அவங்க வாழப்பாடி காவல் நிலையத்தில் சொன்னாங்க. நானும் நேரடியாக வாழ்ப்பாடி போலீசாரிடம் புகார் கொடுத்தேன். அதை வாய்ஸ் ரெக்கார்டிங் கூடப் போட்டிருக்கிறேன்.
ஆனால், காவல் துறையிடம் இருந்து எந்த ஒரு ஆக்ஷனும் இல்லை. இரவு 11 மணி ஆகிறது, அவன் ரொம்ப தப்பாகப் பேசுறான், ராவடி பண்றான் என்று போனில் சொன்னால், அங்கிருக்கும் எஸ்.ஐ., 'அப்படி எல்லாம் உடனடியாக வர முடியாது, அவனின் மனைவி அதிகாரப்பூர்வமாகப் புகார் கொடுத்தால் தான் வர முடியும்' என என் புகாரைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். நான் தவெக உறுப்பினர், விஜய் சார் கட்சியில் இருக்கிறேன். விஜய் சார் வந்து பெண்களுக்கு ஒன்னுனா கண்டிப்பாக உடனே களத்தில் இறங்கிச் செய்வேன் என்று மேடையில் சொன்னார். அந்த நம்பிக்கையில்தான் கேட்கிறேன்.
தயவு செய்து இந்த வீடியோவை மாநிலச் செயலாளர் என்.ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோரில் இருந்து விஜய் சார் வரைக்கும் எல்லாரும் ஷேர் பண்ணுங்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் மனிதநேய ட்வீட்!
தொடர்ந்து பேசிய அவர், "நான் ஒரு சிங்கிள் மதர் (Single Mother). என் வீட்டுக்காரர் ஏற்கனவே இறந்துவிட்டார். எப்போதும் தைரியமாக இருக்கும் போல்டான ஆளான நானே இப்போது பயத்தில் அழுது கொண்டிருக்கிறேன். சிங்கப்படை பெண்கள் பாதுகாப்புனு சொல்கிறார்கள். ஆனால் காவல் நிலையத்தில் ஆக்ஷன் எடுக்க வர மாட்டேன் என்கிறார்கள். இரவு நேரமென்றால் ஒரு பெண்ணின் உயிருக்குக் காவல் துறை பாதுகாப்பு கொடுக்க மாட்டார்களா? நீங்களே சொல்லுங்கள்" என்று கதறி அழுதுள்ளார்.
இந்த வீடியோவை விஜய் ஆண்டனி ஷேர் செய்ததைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் "என்ன விஜய் ஆண்டனி சார் நடுச்சாமத்தில் இந்த கண்ணீர் வீடியோவை போஸ்ட் செய்திருக்கிறீர்கள்? விஜய்ணா தயவு செய்து இந்த தவெக பெண்ணுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும். மருமகன் கொடுமை தாங்காமல் உங்கள் கட்சி பெண் அழுது தவிக்கிறார், உடனே ஆக்ஷன் எடுங்கணா" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிங்கிள் மதர் கண்ணீர் விட்டதை ஒரு சக மனிதனாகப் பார்க்கத் தாங்க முடியாமல் தான் சசி அக்காவின் வீடியோவை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார் என்றும், இதன் மூலம் சசி அக்காவுக்கு விரைந்து நியாயம் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர்.